தமிழ்நாடு அரசு

எங்களைப் பற்றி

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையானது ஒன்றிய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் பல்வேறு திட்டங்களையும், அயல் உதவி திட்டங்களையும் நிறைவேற்றுவதின் மூலம் வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல், சுகாதாரம், பயிற்சி மூலம் திறன்மேம்பாடு, மகளிர் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு செய்தல், அத்தியாவசியமான பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த துறைக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நெறிப்படுத்தும் வகையிலும், முறைப்படுத்தும் வகையிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தல சுயாட்சிகளாக செயல்படும் வகையில் வழிகாட்டுவதற்கு பொறுப்புள்ள துறையாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 12525 கிராம ஊராட்சிகளும், 388 ஊராட்சி ஒன்றியங்களும் (வட்டார ஊராட்சிகள்) மற்றும் 36 மாவட்ட ஊராட்சிகளும் உள்ளன.  தமிழகத்தில் 37 ஊரக மாவட்டங்கள் இருப்பினும் 36 மாவட்ட ஊராட்சிகளே உள்ளன.  அதாவது மயிலாடுதுறை மாவட்டமானது நாகப்பட்டினம் மாவட்ட ஊராட்சியின் ஆளுகைக்குட்பட்டதே ஆகும்.  அடுத்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்களின் போது மயிலாடுதுறை மாவட்ட ஊராட்சி புதிதாக அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும்.

தேசிய அளவில் தமிழ்நாடு புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்வதிலும், திட்டங்களை செயல்படுத்துதலிலும் முன்னோடி மாநிலமாக அறியப்படுகிறது.  இத்துறையின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் சமூகநீதி, சமதர்மம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய இலக்குகளை நோக்கி இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.  அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வரும் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் மூலம் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் அயலுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. 

இத்துறை தனது பல்வேறு அங்கங்களுக்குள்ளாகவும், பிற துறைகளின் திட்டங்களுடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஊரக வாழ் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும், ஊரகப் பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், சேவைகளையும், நீடித்த வாழ்வாதார மேம்பாட்டினையும் உறுதி செய்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சி மட்டுமே வரிவிதித்து வசூல் செய்யும் அதிகாரம் பெற்ற அமைப்பாடும்.

கிராம ஊராட்சி அமைப்புகள் கீழ்காணும் மூன்று வகையான மூலங்களில் இருந்து வருவாயைப் பெறுகின்றன.

  1. வரி வருவாய்
  2. வரியில்லா வருவாய்
  3. மானியங்கள்

கிராம ஊராட்சிகளின் வரிவருவாயில் முக்கிய அங்கங்களாக திகழ்பவையாவன:

  1. வீட்டுவரி / சொத்துவரி
  2. தொழில்வரி

                அதே போன்று, கீழ்காணும் வரியல்லாத வருவாய் இனங்களும் கிராம ஊராட்சிகளால் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகின்றன.

  1. குடிநீர் கட்டணம்
  2. தொழில்களுக்கான உரிமம்
  3. பிற வரியல்லாத வருவாய் இனங்கள்
இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை: 2980
மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை: 24472708
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 28-01-2025